×

மேற்கு வங்கத்தில் பாஜவுக்கு வாக்களிப்பது நல்லது: ஆதிர் ரஞ்சன் சவுத்திரி பேச்சால் சர்ச்சை

புதுடெல்லி: மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரசுக்கு வாக்களிப்பதை விட பா.ஜவுக்கு வாக்களிப்பது நல்லது என்று ஆதிர் ரஞ்சன் சவுத்திரி பேசும் வீடியோவால் சர்ச்சை எழுந்துள்ளது. மக்களவை காங்கிரஸ் கட்சி தலைவராக மேற்குவங்க மாநில மூத்த காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்திரி உள்ளார். தற்போதைய மக்களவை தேர்தலில் அவர் மீண்டும் பஹரம்பூர் ெதாகுதியில் போட்டியிடுகிறார். இந்த நிலையில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய ஆதிர் ரஞ்சன் சவுத்திரி,’ இந்த முறை 400 தொகுதிகளில் வெற்றி பெறும் பா.ஜவின் ஆசை நடக்காது. ஏற்கனவே நடந்த முதல் 2 கட்ட தேர்தல்களில் 100 இடங்கள் பிரதமர் மோடியின் கையிலிருந்து நழுவிவிட்டன.

எனவே மேற்குவங்கத்தில் காங்கிரசையும், மார்க்சிஸ்ட் கட்சியையும் வெற்றி பெறச் செய்வது அவசியம். காங்கிரசும், மார்க்சிஸ்ட் கட்சியும் வெற்றிபெறவில்லை என்றால், மதச்சார்பின்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படும். திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிப்பதை விட பாஜவுக்கு வாக்களிப்பது நல்லது. ஆனால், காங்கிரசுக்கு வாக்களியுங்கள். திரிணாமுல் காங்கிரஸ் அல்லது பாஜவுக்கு வாக்களிக்க வேண்டாம்’ என்று பேசும் வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றி காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில்,’ ஆதிர்ரஞ்சன் சவுத்திரி பேசும் வீடியோவை நான் பார்க்கவில்லை.

எந்த சூழலில் அவர் அப்படி பேசினார் என்று தெரியவில்லை. எப்படி இருந்தாலும் 2019ல் பாஜ பெற்ற இடங்களை பெருமளவு குறைக்க வேண்டும் என்பதே காங்கிரஸ் கட்சிக்கு ஒரே ஒரு நோக்கம் என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். இது சட்டமன்றத் தேர்தல் அல்ல, இடதுசாரிக் கட்சிகளும் காங்கிரசும் இந்தியா கூட்டணியில் உள்ளன. அதே போல் திரிணாமுல் காங்கிரசும் இந்தியா கூட்டணியில் இருப்பதாக மம்தா பானர்ஜியும் கூறியுள்ளார், இருப்பினும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடன் எங்களால் தொகுதிப் பங்கீட்டை செய்ய முடியவில்லை’ என்றார்.

திரிணாமுல் தலைவர் அதிரடி நீக்கம்
மேற்குவங்க மாநிலத்தில் திரிணாமுல் கட்சியில் இருந்து பா.ஜவில் இணைந்து இப்போது கொல்கத்தா வடக்கு தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள தபாஸ் ராய்க்கு ஆதரவாக திரிணாமுல் பொதுச்செயலாளர் குணால் கோஷ் பேசினார். அவருடன் பிரசார ேமடையில் குணால் கோஷ் பங்கேற்றார். இதையடுத்து திரிணாமுல் கட்சியில் இருந்து குணால் கோஷ் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

The post மேற்கு வங்கத்தில் பாஜவுக்கு வாக்களிப்பது நல்லது: ஆதிர் ரஞ்சன் சவுத்திரி பேச்சால் சர்ச்சை appeared first on Dinakaran.

Tags : BJP ,West Bengal ,Adhir Ranjan Chowdhury ,New Delhi ,Trinamool Congress ,Congress ,Lok Sabha Congress ,Dinakaran ,
× RELATED மேற்குவங்கம் சந்தேஷ்காளியில் உள்ளூர்...